தினம் ஓரு மூலிகை :
வேப்ப மரம்:
வேம்பு
தாவர இயல் பெயர்: Azadirachta indica
இதன் மறு பெயர்கள்: வேப்பமரம், அரிட்டம், துத்தை, நிம்பம், வாதாரி, பாரிபத்திரம், பசுமந்தம்
வளரும் இடங்கள்: இந்தியா, ஈரான், பாகிஸ்தான், இலங்கை , மியான்மர், இது தவிர தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவை சேர்ந்த இதர நாடுகள், ஆப்ரிக்கா, அமெரிக்க கண்டங்கள், ஒரு சில அரபு நாடுகள்
பயன் தரும் பகுதிகள்: இலைகள், கொட்டைகள், பட்டை, மலர், பழம் மற்றும் குச்சி ஆகிய இவை அனைத்துமே பயன் தரும் பகுதிகள் தான் பொதுவான தகவல்கள் : "வேம்பு" என்று அழைக்கப்படும் வேப்ப மரத்தை அறியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. இதனை சக்தியின் அம்சமாகவும் கருதி தலை முறை, தலை முறையாக மக்கள் பாதுகாத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதன் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டது தான். மனிதர்களுக்கு ஊரு விளைவிக்கும் நுண்ணிய கிருமிகளை அழிக்க வல்லது. இதில் இருந்து தற்காலங்களில் சோப்புகள் கூட தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் காணப்படும் முக்கிய மூலிகைகளில் முதன்மையானது இந்த வேம்பு என்று சொன்னால் அது மிகை ஆகாது. இது மருத்துவ உலகில் மார்க்கோசா மற்றும் நீம் என்று அழைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் கூட வேப்பங்குச்சியில் பற்களை சுத்தம் செய்யும் வழக்கம் வெகுவாகப் பரவி வருகிறது.
வேப்ப மரம் நமக்கு நிழலை மட்டும் அல்ல பாதுகாப்பையும் அளிக்கிறது. வேப்ப மரத்து இலைகளில் பட்டு வெளிவரும் காற்றும் கூட ஊரு விளைவிக்கும் கிருமிகளை அழிக்க வல்லது. வேப்ப மரத்தின் பழ விதைகளில் (வேப்பங்கொட்டை) இருந்து வேப்ப எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது கொசுக்களை விரட்ட வல்லது. வேப்ப எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் வீட்டிற்கு கொசு, ஈ என எதுவுமே வராது. வேப்பெண்ணெய் பொதுவாக சமையலில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இதிலுள்ள மருத்துவக் குணங்களின் காரணமாக, மருந்தாகவும், ஒப்பனைப் பொருட்களாகவும், அத்துடன் பீடைகொல்லிகள், பூச்சிகொல்லிகளாகப் பயன்படுத்தப்படுவதுடன், சேமிக்கப்பட்ட விதைகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கவும் உதவுகின்றது.
மொத்தத்தில் வேப்ப மரத்தை முழுமையாக உபயோகிக்கும் பட்சத்தில் பல வித வியாதிகளில் இருந்து நாம் விடுபடலாம். இது மருத்துவ உலகத்தில் சர்வ, சரும ரோக நிவாரணியாகக் கருதப்படுகிறது.
புராணங்களில் வேப்ப மரம் : தேவர்களின் தலைவனான இந்திரன் தனது வெள்ளை யானையில் அமிர்த கலசத்தினை கொண்டு செல்கையில், அதிலிருந்து தளும்பிய அமிர்தம் வேப்ப மரத்தில் விழுந்ததாகவும், அதனால் தான் அது எல்லா விதமான நோய்களையும் தீர்க்கும் படியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல இந்த மரம் சூரியனின் அருள் பெற்ற மரம் என்றும். இதன் நிழலில் சூரிய தேவனே தங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவப் பயன்கள்:
*மாதம் ஒரு முறை வேப்பம்பூ ரசம், துவையல் ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பாக சித்திரை மாதம் துவங்கும் சமயம் அதிகளவில் வேப்பம் பூக்களை மரத்தில் காணலாம்.
* வயிற்றில் பூச்சி இருந்தால் தினமும் வேப்பம் பழத்தை சாப்பிடுங்கள்.
* வேப்பிலை, எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்தத்தால் வரும் மயக்கம் குணமாகிவிடும்.
* வேப்பம் பூவை உண்டு வந்தால் வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிக்கும்.
* வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.
* சர்க்கரைவியாதியை கட்டுக்குள் கொண்டுவர தினமும் வேப்பங்க்காயை சாப்பிட்டு வாருங்கள். மாத்திரையின்றி கட்டுக்குள் கொண்டு வரலாம்.
* வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரையை சேர்த்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் தீராத தொழுநோய் முதலான அனைத்து சரும வியாதிகளும் குணம்டையும்.
* 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும்.
* வேப்பங்குச்சியை பயன்படுத்தி பல் விலக்க. பல் சம்மந்தமான அனைத்துப் பிரச்சனைகளும் தீரும்.
* வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும்.
* வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து நகச்சுத்திக்கு பற்று போட்டால் சீக்கிரத்தில் குணமாகும்.
* வீட்டில் சாம்பிராணியுடன் வேப்பம் பூவையும் கலந்து தூபம் போட்டால் காற்றில் இருக்கும் விஷ ஜந்துக்கள் மடியும்.
* வேப்பம் இலையை தண்ணீரில் போட்டு அதனை நன்கு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் பரு, கரும் புள்ளிகள் ஆகிய அனைத்தும் நீங்கும். வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற் பூச்சிகளையும் சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும்.
* அம்மை நோய் வந்தவர்கள் வேப்பிலையை கீழே போட்டு அதன் மேல் படுத்துக்கொள்வது நல்லது. மேலும் வேப்பிலை அல்லது இளந்தளிருடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அம்மை கொப்புளங்களின் மீது தடவி வந்தால், நோய் விரைவில் குணமாகும்.
* காய்ந்த வேப்பம்பூ தூளை 4 சிட்டிகை எடுத்து இஞ்சிச் சாறில் கலந்து சாப்பிட்டால் அடிக்கடி வரக்கூடிய ஏப்பம் குணமாகும்.
* வேப்பம்பூ தூள் 4 சிட்டிகை அளவு எடுத்து, 2 சிட்டிகை பெருங்காயத்தூளுடன் சேர்த்து வெந்நீரில் கரைத்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை விலகும்.
* வேப்பமரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தாவரங்களை அழிக்கும் பூச்சிகளை அவை கூட்டு புழு பருவத்தில் இருக்கும் போதே அழித்து விடுகிறது. வேப்பமரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளித்தால் அம்மருந்தின் வாசனை இருக்கும் வரை பூச்சிகள் எந்த செடியினையும் அழிக்காமல் உள்ளது.
* வேப்பமரம் சுற்றுப்புறச் சூழ்நிலையை பாதுகாக்கிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. அதிகமான வேப்ப மரங்கள் நடுவதால் பூமி குளிர்ச்சி அடைகிறது. எந்த சூழ்நிலை யிலும் வேப்பமர வளர்ச்சி பாதிப்பு அடைவது இல்லை. வேப்பமரம் மிக வேகமாக வளரும் மரமாகும். தொண்ணூறு அடி உயரம் வரை வளரும். பூமியின் பசுமையை காப்பாற்றும் மரம் வேப்ப மரமாகும்.
* வேப்ப மரப்பட்டையின் சாறு மாத்திரை களாக தயாரிக்கப்பட்டு ஆண்கள் உட்கொண் டால் ஆண்களுக்கு அது இயற்கையிலேயே ஒரு குடும்ப கட்டுப்பாட்டு சாதனமாக அமைகிறது. வேப்ப மரப்பட்டைகள் மற்றும் வேப்ப இலைகள் இயல்பாகவே ஒரு பூச்சி கொல்லி மருந்தாக வேலை செய்கிறது.
* வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.
* வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும்.
* 100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.
* லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.
* வேப்பமரத்தின் இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.
* விஷம் உட்கொண்டவர்களுக்கு வேப்பங் கொட்டையை மையாக அரைத்து நீரில் கலக்கிக் கொடுக்க வாந்தி ஏற்பட்டு விஷம் வெளியே வந்து விடும்.
* 5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.
* வேப்பம் பழத்துக்கு நீண்ட ஆயுளைத் தரும் ஆற்றல் உண்டு. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
* வேப்பம் பிண்ணாக்கு ஒத்தடம் உடல் வலியை உடனே நீக்கும்.
* வேப்பங்கொட்டையின் பருப்புக்களை அரைத்துப் பூசினால் புழுப்பட்ட புண்களும் குணமாகும்.
சித்த மருத்துவப் பாடல்களில் வேப்ப மரம் :-
காய சித்தியாகும் கடி யசிலேஷ்ம்மாறும்
தூயவிந்து நாதமிவை சுத்தியுமாம் – தூயவருக்கு
எத்திக்கும் கிட்டும் இலையருந்தில் வாயெல்லாம்
தித்தக்கும் வேம்பதற்கு தேர்.
————————————————————– அகத்தியர்.
குட்டநோய் பதினெட்டும் தீர்வதற்கு………
தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
ஏனமுதற் ஜலமிக்க கொழுந்தைக் கிள்ளி
இன்பமுடன் தின்று வாயிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்பங்கள் தீண்டினாலும்
அதுபட்டுப் போகும்ப்பா அறிந்து கொள்ளே
கொள்ளப்பா மாதமொன்று கொண்டாயாகில்
குட்டமென்ற பதினெட்டு வகையுந் தீரும்.
பொருள்: கார்த்திகை மாதம் விடுகின்ற கொழுந்தை இருபத்தேழு நாள் சாப்பிட பாம்பு விடம் நீங்கும். பாம்பு கடித்தாலும் விடம் ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பதினெட்டு வகையான குட்டமும் குணமாகும். நூற்றாண்டு வேம்பின் பூ, தளிர், பட்டை, வேர், காய் உலர்த்திய சூரணத்தை ஆறு மாதம் சாப்பிட்டு வந்தால் நிச்சையம் குட்டம் முதலான தோல் நோய் அனைத்தும் குணமாகும். புளி நீக்கி பத்தியம் இருத்தல் வேண்டும்.
0 Comments